- மலர்தலின் தொடக்கமா !-"விழிப்பு . என்றுமில்லாமல் மிக சீக்கிரமாகவே விடிந்தது என்காலை நேரம் .கண் விழித்த போது ,கொசு வலையை தாண்டி தூறலுடன் கூடிய ,மேக கூட்ட வானம் ,மதுரை மாநகரை தன் குளிரை தூவி வாழ்த்திக் கொண்டு இருந்தது ஜன்னல் வழியே தெரிந்தது .என் விழிப்புக்கும் சேர்த்து அந்த குளிர் தழுவல்தான் காரணம் என்பதுவும் புரிந்தது . இரவு முழுவதும் பெய்த மழையால் ஏற்பட்ட குளிர்வு ,எனக்கு பிடித்த ஒன்று - "போதையில் இல்லாமல் ஒரு போதை அது ", ....அனுபவிக்க துடித்தது என் மனம் ..,கூடவே ஒரு சிறு அவசரம் மனதுக்குள் எழுந்து அடங்கியது .பூஜைக்கு பூக்கள் வாங்க பூ மார்க்கெட் செல்ல வேண்டும் , நவ ராத்த்ரி வந்து விட்டாலே ,இந்த அவசர அவஸ்தை என்னை தொற்றிக் கொள்கிறது . ஸ்ரீ வித்யா உபாசகன் ஆனதால் ,அன்றலர்ந்த மலர்களின் ,அலங்காரம் இல்லாத அம்பிகையை பார்க்க மனமில்லை ,அதனாலேர்ப்பட்ட அவசரமே ,நிமித்தமாக மாறி என்னை படுக்கையில் இருந்து உந்தியது ,எழுந்து சென்று குழாயை திறந்து விட்டு விட்டு , தண்ணீரை இரு கைகளிலும் வாங்கி ,முகத்தில் அறைந்தேன் ,சுரீர் என்று ,என்றுமில்லாமல் குளிர் -முகத்திலிருந்து ,அடி வயிற்றின் கடைசி நுனி வரை பாய்ந்தது ,மூலாதாரத்திலிருந்து உச்சி வரை என் முள்ளந்தண்டு அதிர்ந்தது , கூடவே அனிச்சையாய் என் கழுத்து ஒரு பக்கம் இழுத்து கொண்டு திரும்பியது .துண்டெடுத்து கண்ணாடி முன் நின்று ,முகம் துடைத்து விட்டு ,கண்ணாடியைப் பார்த்தேன் ,கண்களின் கருவிழிகள் அகல விரிந்து ,வெளி தள்ளியிருந்தது.இரவில் குருநாதரையும் , வாலை திரிபுர சுந்தரியையும் ,சிவமூலி கற்பத்தின் துணையுடன் ,அழைத்ததின் விளைவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன் .
...விழிப்பின் தொடக்கம் -இதழின் நுனி விரிதலோ ..........
மாடியிலிருந்து கீழே இறங்கி ,கதவை திறக்கும் போதே ,அவ்வளவு இதமாக இருந்தது என் காலை ....அவ்வளவு நாளாக உறுத்தாத என் பைக்கின் நிறம் ,"பளிச்சென்று"என் பார்வையில் ஒட்டியது -"சிவப்பாக" ......,தடவி கொடுக்க வேண்டும் போல் இருந்தது என் புரவியை ..... .முதன் முதலாக நான் என் கண்களால் சாப்பிடுவது போல் இருந்தது--". என் புற வெளியை "............................மெயின் கேட்டை திறக்கும் முன்னே ,யாருமில்லா தெருவின் மரப் பசுமையின் ஆழ்ந்த குளிர் மூச்சுக்கள் ,அதன் வாசமாய் ......முன்னறிவிப்பாக ..தங்கள் காத்திருத்தலை சொல்லிக் கொண்டு இருந்தன .என் சுவாசமும் ,அவ்வளவு வாசங்களையும் சாப்பிட்டு கொண்டே இருந்ததை .....என் உடல் மயிர்க் கால்கள் சிலிர்த்த போது உணர்ந்தேன் .
....பார்வையின் ஊடுருவல் -காட்சிப் பிழைகளோ !.... ஆழமாக புகையை இழுக்கும் போதுதான் கவனித்தேன் ,என் சிகரெட்டின் நுனிக் கங்கு ,மிக ஆழமாக ஒளிர்ந்து அடங்கியதை ............இன்னும் தேடலின் தூரம் அதிகமுள்ளது என்பதை ..........................என் மனம் அசை போட்டஅந்த நொடியின் கடைசி புள்ளியின் முடிவுரையாக ..... ..உள்ளூர மௌனப் புன்னகையுடன் கூடிய ஒரு சிரிப்பு எழுந்து அடங்கியது .நிறைய கடந்து போன நாட்களுக்கு பிறகு ,காலையில் என்னுடைய சிறிய மனக் கிளர்ச்சி புகையாய் ,புகைந்து கொண்டிருந்தது . இரைச்சலுடன் கூடிய ,மத்திய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையின் ,ஒரு பெரிய வளைவுக்கு பின் ,சட்டென திரும்பும் சிறிய தார் சாலையின் ,வளைவு விளிம்பின் நுனியில் , முன் அறிவிப்பின்றி இருந்த அந்த 'டீ"" கடை,என்னை ஏற்று கொண்டிருந்தது .....கடந்த 5 நிமிடமாக ....., கடையில் நரை நிறைந்த இளம் முதியவர் ,தன் தொழிலை சிரத்தையாக செய்து கொண்டு இருந்தார் , எதிரில் தார் சாலையின் எதிர் விளிம்பின் வளைவை ,ஒரு மருத்துவ மனையின் பின்புறம் தன் முதுகை காட்டி நின்று கொண்டு இருந்தது ,முக்கிய சாலையில் உள்ள ,மருத்துவ மனையின் வாசலில் இருந்து இடப்புறம் இருந்த , டீக் கடைக்கும்,வாசலுக்கும் ,நோயாளியின் உறவினர்கள் , காலியான ,நிரம்பிய ,டீ ,காப்பி வாளிகளுடன் , உலவிக் கொண்டு இருந்தார்கள்.இதற்க்கு இடையில் மருத்துவ மனையின் முன்புறம் இருந்த ஒரு சிறிய பேருந்து நிறுத்தம் ஒன்றிரண்டு மனிதர்களைக் கொண்டு காத்திருந்தது .. என் கண்களுக்கு ... அது ஒரு அழகான படக் காட்சிகளாக ,தன்பதிவுகளை பதிந்து கொண்டு இருந்தது ,திரும்பி ஒரு டீ சொல் என்றது மனம் ..திரும்பும் போதுதான் கவனித்தேன் ....கொதிக்கும் பால் பாத்திரத்தை ,கடைக் காரர் திறக்கும் போதெல்லாம் ,பால் ஆவியின் நெளிவுகள் ,வாய் திறந்து மூச்சு விட்டுக்கொண்டு இருந்தன . கூடவே பாலின் மேல் தாளம் போலவே .....என் மனமும்.........
................வெம்மையின் விரவல் -வாழ்வியல் இழைகளோ !......... காதுகளை விரைப்படையசெய்யும் ,ஒரு நீண்ட விசில் ஒலி ........ நிறுத்தத்தை தாண்டிகொஞ்ச தூரத்தில் ,நிறுத்தத்தை நோக்கி ஒரு உருவம் வந்து கொண்டிருந்தது ......யாரையும் கண்டுகொள்ளாமலேயே ...... .....,நரைத்தஓட்ட வெட்டிய தலை முடியுடன் , ஒடுங்கிய கன்னங்களும் ,ஒடிசலான கருத்த தேகமும்,அதன் மேலே ஒழுங்கான கட்டுதலுடன் கூடிய வேட்டியும் ,பழைய அழுக்கான சட்டையும் அதன் மீது சம்பந்தமே இல்லாத கையில்லாத ,நைந்த கோட்டும் அணிந்து ,அதன் மீது ,மூன்று விசில்களை ,ஒரு தடித்த நூலில் கட்டி ,கழுத்தில் தொங்க விட்டிருந்த ஒரு மனிதன் -நேராக எதிர் வளைவில் ,காலை கடன் ஆசனத்தில் வந்து அமர்ந்தது .யாரும் கண்டு கொள்ளாத நிலையில் ,குனிந்து எதையோ தேடிக் கொண்டு......அங்கிருந்த சூழலின் புறச் செயல்களோ ,நிகழ்வுகளோ - எதுவுமே அந்த மனிதனை பாதிக்கவில்லை .........அப்போதுதான் அந்த மனிதனின் ,இடக் காலை கவனித்தேன் .அவரின்கணுக் காலிற்கு மேல் பகுதி முதல் பாதி கால் வரை ,ஒரு மண் வெட்டியால் கொத்தி எடுத்தது போல் ஒரு காயம் ,ஒரு குழிவாக காய்ந்து ,உள் எலும்பின் மேற் பரப்போடு தெரிந்தது ......ஆனால் அதைப் பற்றிய பற்றிய எந்த கவலையில்லாமல் அந்த மனிதன் ...தெரு முனையின் ஓரத்தில் இருந்த ,பச்சையம் நிறைந்த பசுமையான சிறு செடிகளை ,பீய்த்து எரிந்து கொண்டு இருந்தது . என் மனம் போலவே ...என் எழுத்துக்களும் அக்ரினையில் ஆன்மாவையும் ,உயர் திணையில் அவர் உடலையும் வைத்துப் பார்த்தது ..அந்த காட்சியின் அஸ்திரம் என் மனதை தீண்டிய அந்த நொடியில் ............... ..அதிர்ச்சி என்பது சிந்தனைகள் இல்லாத நிலை என்பது அதிர்ந்த போதுதான் எனக்கு தெரிந்தது .மனம் சட்டென முகத்தை சுளிக்க வைத்தாலும் ,கொஞ்சம் நெகிழ்ந்தது ,அந்த கணத்தில் அந்த மனிதன் ,தன் பச்சை நிற விசிலை எடுத்து பலமான ,அதன் ஊளையிடும் சத்தத்தை ஒலிக்க விட்டது .....என் சிந்தனைகளும் அந்த ஊளையிடல்களில் சட்டென திசை மாறி கலந்திருந்ததை உணர முடிந்தது ....நேற்று .....
.....இழைகளின் நெசவு -மலர்களின் வாசனையோ !........ அந்த மனிதனின் முன் ,நான் மருத்துவன் என்ற அடையாளத்தோடு அமர்ந்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும் போல் இருந்தது ,ஏன் ?என்றால் ,கிராமத்து பெரிய மனிதன் தோற்றதிலிருந்த அந்த மனிதன்,தன் பிரதாபங்களை சொல்லி ,சொல்லி என் முன்னே ஒரு மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த ,அழகான , ஓங்கிய வானளாவிய கட்டிடத்தை தன் சொற்களால் கட்டிக் கொண்டு இருந்தார் . எப்பொழுதும் போல் முகத்தில் ஒரு புன்னகையை தேக்கி ,வந்தவரை கவனித்து கொண்டிருந்தேன் ,B.P பாத்துட்டு போலாம்னு வந்தேன் டாக்டர் ,என்று அவர் ஆரம்பித்தது முதல் நான் அவரையே கவனித்துக் கொண்டு இருந்தது கொஞ்சம் புரிந்தது ,தங்க மெருகு பூச்சு கண்ணாடிக்கு பின்புறம் - டை அடித்த சுருண்ட முடிகளுடன் கூடிய அவரின் தோரணை ,உருண்டு திரண்டிருந்த அவரின் முகத்திலும் ,உடலிலும் தெரிந்தது ,மெதுவாக ஒரு புன்னகையுடன் அவர் பேச்சுக்களை ஆமோதித்து கொண்டே BP பார்த்தேன் ,அவர் நிதானத்திற்கு சம்பந்தமில்லாமல் அது எகிறிக் கொண்டு இருந்தது ,நான் கூறும் முன்பே ,என்ன சார் கூட இருக்கா ?என்று ஒரு சிரிப்புடன் கேட்டார் ,மாத்திரை சாப்பிட வில்லையா ?என்று கேட்டவுடனே ,ஒரு பெரிய மருத்துவரிடம் சென்று வந்ததையும் ,அவருக்கே உரிய தோரணையில் சொல்லி விட்டு ,நினைச்சா சாப்பிடுவேன் ,இல்லையென்றால் விட்டுடுவேன் ,அவருடைய பேச்சு என்னையே கொஞ்சம் மிரள வைத்தது என்றும் சொல்லாம் ,இதுக்கேவா !என்பது போல் ,சார் எனக்கு சுகரும் உண்டு என்று என்னை பிரமிக்க வைத்தார் ,அழுக்கே இல்லாத தூய்மையான வேஷ்டியை தூக்கி இடது காலை காண்பித்தார் ,முழங்காலுக்கு கீழே ரத்த நாளங்கள் -,தேங்கிய குருதியுடன் பருத்து ,பச்சை பாம்புகளாய் சுற்றிக் கொண்டு இருந்தது போல் .......ஒரு ஆறாத வெளிறிய சதை குழம்புகளுடன் ,அழுக தொடங்கியிருந்த புண் தெரிந்தது .இயல்பாக எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுகிற ஒரு அசௌகரிய தன்மையுடன் அவர் என் முகத்தை பார்த்து கொண்டே ......இது ஆறவே மாட்டேங்குது சார் !என்றார் .ஏன் சார் ? நீங்க ஒழுங்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதில்லையா ? என்ற என் கேள்வியை தொடங்கியவுடன் ,அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் ........ஊற்று பீறிடத் தொடங்கியது ,கூடவே அவரின் உடலும் குலுங்கத் தொடங்கியது ,என் பார்வையை தவிர்ப்பதற்காக , அவருடைய தலை இயல்பாக குனிந்துகொண்டது .என் மருத்துவ தொழிலின் கர்மமோ ,சாபமோ தெரிய வில்லை ,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் என்னை சுற்றி , தினமும் யாராவது அழுது கொண்டே இருப்பது பழகிப் போன ஒரு செயல் ஆகி விட்டது ,நெகிழ்தல் என்ற சொல்லின் ஒரு உண்மையான பொருளை ,இறைவன் எனக்கு நினைவு படுத்திக் கொண்டே இருப்பது ,அந்த கணத்தில்தான் ,நான் அவரை ஒரு நெகிழ்வுடன் பார்த்துக் கொண்டே , கவலைப் படாதீர்கள் சார் ,மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று மனமுவந்து ,இறைவன் எனக்காகவே சொல்லிக் கொடுத்த அந்த "பொய்யை "சொன்னேன் ,அதற்குள் அவர் கண்ணீரை துடைத்துக் கொண்டு ,ஒரு வறண்ட சிரிப்புடன் ,அதில்லை டாக்டர் ,மருந்துகள் பிரச்சினை இல்லை ,,ரெண்டு பசங்கள படிக்க வைச்சேன் ,பொண்டாடிக்கு நகைகள் சேர்த்து கொடுத்தேன் ,சொத்து சேர்த்து வைத்தேன் ,ஆனால் மாத்திரை சாப்பிடுவதற்கு ஒரு டம்ளர் தண்ணீர் ,கேட்டால் எடுத்துக் கொடுக்க ஆளில்லை ,என் பொண்டாட்டியே -ஏன் ?கை ,கால் நல்லாதானே இருக்கு ,வந்து எடுத்து குடிக்க வேண்டியதுதானே !என்கிறாள் ,நேற்று வீட்டில் யாருமில்லாத பொழுது ,தண்ணீர் எடுக்க போய் - தலை சுற்றி கீழே விழுந்து விட்டேன் ,அரை மணி நேரம் அப்படியே கிடந்தேன் ,அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நானாகவே .....அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ,அவர் கண்கள் கண்ணீரை சுரந்தன ......எனக்கு புரிந்தது ,அவருடைய அகங்காரம் என்னும் அதிகார மனம் ,,....இன்னும் ஏவலாள் தேடுகிறது என்பதை ....அதனால் ஏற்ப்பட்ட மனச் சிதைவு,அவர் தனக்கு கொடுக்கப் பட்ட மருந்துகளின் மேல் அந்த எரிச்சல் மிகுந்த மனதை பிரயோகம் செய்கிறார் என்பதை ...அந்த மனிதரின் எண்ணங்களைப் போலவே ,பார்த்து கொண்டிருக்கும் போதே என் முன் கட்டிய அவரின் அழகான கட்டிடமும் , நொறுங்கி சரிந்து விழுந்து கொண்டு இருந்தது ...அவர் சென்ற பின்னும் அந்த தாக்கம் ,என்னுடைய "நான்" சேர்த்து வைத்திருக்கின்ற இயலாமைகலூடு ஒட்டிக் கொண்டது .....இதுவும் ஒரு இயல்பற்ற மரணமோ ....மரணம் என்றவுடன் எண்ணங்கள் அதிகமாவது இயல்பானதா .......பிறப்பே ஒரு நோயோ !......ஒரு இறுக்கத்தோடு தூக்கமில்லாமல் தூங்கிய இரவுகளில் ஒன்றாகத்தான் ..நேற்றைய இரவு அமைந்தது .....





